கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி, சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு நேற்று (4.12.2021) அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.