“முதல்ல பெரியார் மீது வழக்கு போடட்டும்.. அப்பறம் என் மீது வழக்கு போடட்டும்..” பிப்ரவரி மாதம் கோவையில் சீமான் பேசியதற்கு இன்று தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவும் முன்பு, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேசு பொருளாக இருந்தது சிஏஏ மற்றும் என்ஆர்சி. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தின. அதில் நாம் தமிழர் கட்சியும் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்தது.
அதன் ஒருபகுதியாக மதுரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் இந்திய குடிமகனா என்று சான்று கேட்கிறியே.. நீ இது தெரியாமலேயே 72 ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்திட்டியா.. நான் குடிமகனா இல்லையான்னு ஏன் இப்போ குழப்பம் வருது.. முதல்ல மோடி, அமித்ஷா, பாஜக அமைச்சர்கள் இவங்க மொத்த பேரும் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்கட்டும், அதுக்கு பிறகு மக்கள் சமர்ப்பிப்பது குறித்து நாம அப்பறம் பேசுவோம்” என்றார்.
மேலும் வாசிக்க: அபிஷேகம், ஆகமவிதிகளை இழிவுபடுத்துகிறாரா.. சர்ச்சையில் விஜய் சேதுபதி
அதனைத் தொடர்ந்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த “ஷாகின்பாக்” போராட்டத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி பேசிய சீமான், “இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை என தந்தை பெரியார் சொன்னார். வழக்கு போடுவது என்றால் பெரியார் மீது போட்டு விட்டு அப்புறம் என் மீது போடட்டும்.
என்கிட்ட குடியுரிமை சான்றிதழ் இருக்கு. ஆனா தர மாட்டேன்.. அப்படி கேட்டால், நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லைன்னு சொல்ல முடிவெடுத்துட்டேன். இதையே ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும்” என்று பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் போராட்டத்தை தூண்டும் விதமாக பேசியது, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு சீமான் மீது தேசதுரோக வழக்கு ,விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.