தமிழ்நாட்டையே ஒட்டுமொத்தமாக உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் ஒரு மாணவியின் புகார் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அந்த கொடூரங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி, சில முக்கிய பிரமுகர்களை சிக்க வைத்தது. பேஸ்புக் மூலம் பெண்களை கவர்ந்து, அவர்களை பாலியல் ரீதியாக கொடுமை செய்த கொடூர அரக்கர்களை அடையாளம் காட்டிய புகார் அது.
அதிகார பலம் படைத்த சில பண முதலைகளின் பிடியில் சிக்கி இளம்பெண்கள் பலர் சித்ரவதை அனுபவித்த அந்த வீடியோக்களை பார்த்து நாடே கலங்கியது. அந்த கொடூரர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்க வேண்டும் எனும் கருத்து வலுபெற்றது. ஆனால் இன்றளவும் இந்த வழக்கில் யார் முக்கிய குற்றவாளி எனும் முடிவுக்கே வரமுடியாத நிலை தான் நீடிக்கிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘கருத்துகளை பதிவு செய்’. 1 AM, ஜித்தன்-2 படத்தின் இயக்குனர் ராகுல் இப்படத்தை இயக்குகிறார். பழம்பெரும் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் அவர்களின் பேரன் எஸ்எஸ்ஆர்.ஆர்யன் நாயகனாகவும், உபாஷ்னாராய் எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராகுல், “சமூக வலைதளமான முகநூல் பற்றியது தான் இப்படம். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை எடுத்தால் எனக்கு மிரட்டல்கள் வரும் என்று என் நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமூகத்திற்கு நல்ல படம் தர வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தை எடுத்துள்ளேன். மேலும் முகநூல் பயன்படுத்தும் அனைத்து பெண்களும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.