மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது கமல், ஆன்மீகவாதியும், ஈஷா பவுண்டேஷன் தலைவருமான ஜக்கி வாசுதேவ்விற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவிரியை மீட்பதற்காக யோகா ஆசிரியரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று முதல் அதாவது செப்டம்பர் 3 முதல் 15-ந்தேதி வரை தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார்.

இந்த பயணம் குடகு, பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், திருவாரூர் உள்பட 30 இடங்களில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் நிறைவுதின நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காவிரிக்காக ஈஷா பவுண்டேஷன் நடத்தும் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு எனது வாழ்த்துக்கள். மத வேறுபாடின்றி இதுபோன்ற பொதுவான ஒரு விஷயத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமை. பகுத்தறிவு கொள்கை என்பதும் இதுதான். ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஈஷா யோகா மையம் அமைப்பதற்காக யானை வழித்தட காடுகளை அளித்ததாக தொடர்ந்து சமூக, இயற்கை ஆர்வலர்கள் ஜக்கி வாசுதேவ் மீது குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.