கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து, சர்ச்சையான நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை விளக்கம் அளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு, தமிழ்நாடு அரசு மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவாலயம் எழுப்பி வருகிறது. அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் பிரமாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து. மேலும் ரூ.81 கோடி செலவில் மெரினா கடலுக்குள் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையில் இருந்து கண்ணாடி பாலமும் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

இதற்காக சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று (31.01.2023) நடைபெற்றது. இதில், பல திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டு, அரங்கத்தை நிரப்பினர்.

இதனால் பலர் கருத்து தெரிவிக்காமல் திரும்பிய நிலையில், முகிலன் உள்பட சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு அங்கிருந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், முகிலன் உள்பட சிலர் அங்கிருந்து காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல், பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்கருத்தை பதிவு செய்ய திமுகவினர் தடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக பொதுப்பணித் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமைய வுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இத்திட்டத்திற்கு தேவையான கடல்சார் மேலாண்மை குழும அனுமதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதியும் பெற உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தற்கு தேவையான சென்னை துறைமுகம், தேசிய கடலோர பாதுகாப்புப் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் தடையில்லா சான்றிதழ் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.