ஆம் லேஸ் சிப்ஸ் (LAYS )தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு ரக விதைகளை, குஜராத் விவசாயிகள் அனுமதியின்றிப் பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 9 விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு விதைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தங்கள் நிறுவனத்துக்கு இருப்பதால் அதைப் பயிர்செய்து நிறுவன உரிமைகளை மீறிய விவசாயிகள் நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டுமென்றும் பெப்சி நிறுவனம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஏப்ரல் 26 வரை இந்த வகை உருளைக் கிழங்கு பயிரிடவும், விற்கவும், வளர்க்கவும் குஜராத் நீதிமன்றம் தடை விதித்து விசாரணைக் குழுவையும் அமைந்துள்ளது.
இது தொடர்பான அடுத்த விசாரணை ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் இதுகுறித்து கூறிய விவரம் பிவருமாறு :
விதையே பறிக்கப்பட்டப் பிறகு எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது
பெப்சி ஒரு அமெரிக்க நிறுவனம். அந்த பன்னாட்டு நிறுவனம் காப்புரிமை வாங்கிவிட்டு இந்தியாவில் அதன் சொந்த நாட்டு விவசாயிகளின் விவசாயத்தை முடக்குகிறது. இதனை எப்படி ஏற்பது.
எங்களுடைய கேள்வி என்னவென்றால், மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது பாஜக அரசுதான் இருக்கிறது. அவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்றுதானே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு போட்டுள்ளதில் இந்த தேசபக்தர்களின் நடவடிக்கை என்ன?
இந்திய விவசாயிகளுக்கு இங்குள்ள விதைகளை வைத்து பயிர்செய்ய உரிமை இல்லை என்றால், இந்த நாட்டின் சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகிவிட்டது என்றுதான் உணர வேண்டி உள்ளது.
இதன் மூலம் விவசாயிகளின் இறையாண்மை பறிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி ஜனநாயகமாகும். இதில் குற்றச்சாட்டப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கங்கள் எல்லாம் அணிதிரண்டுள்ளன.
குஜராத் விவசாயிகளுக்கு ஆதரவாக 30ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. நாங்கள் மக்களிடம் கூறுவது என்னவென்றால் பெப்சி நிறுவனங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
நமது நாட்டு விவசாயி உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து நமக்கு தருவதையே தடுக்கிறார்கள் என்றால், இந்த நாட்டின் உணவு உரிமையே அந்த பன்னாட்டு நிறுவனங்கள் பறிக்கிறது என்று தானே அர்த்தம்.
இதில் நாம் எந்தவகை பயிரை பயிரிட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். இதன்மூலம் லேஸ் சாப்பிட வேண்டும் என்பது மறைமுகமாக கட்டாயமாக்கப்படுகிறது.
விவசாயிகளுடைய வேளாண்மை செய்யக் கூடிய இறையாண்மை என்பது விதையும், தண்ணீருமே, விதையே பறிக்கப்பட்டப் பிறகு எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது. விவசாயிகளை பாதுகாப்பதற்கு குஜராத் அரசும் வரவில்லை, மத்திய அரசும் வரவில்லை.
இதற்காகத்தான் அவர்களுடைய தேசபக்தியை நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதில் காங்கிரஸும் குரல் கொடுக்கவில்லை. இதுவரை பிரதமர் மோடி இதுபற்றி பேசவில்லை. அம்பானியையும், அதானியையும் பற்றி பேசுகிறார் ஆனால் விவசாயிகளை பற்றி பேசவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் உலக வர்த்தக அமைப்பு உள்ளது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்தை கட்டுப்படுத்துகிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை தற்போது பாதுக்காக்க வேண்டிய தேவை நமக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் இம்மாதிரியான முந்தைய வழக்குகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஏழை விவசாயி எப்படி கார்பரேட் கம்பெனியை எதிர்த்து வழக்கு நடத்துவான். தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் விவசாய அமைப்புகள் சேர்ந்துதான் வழக்கை அணுகி உள்ளன என வருத்ததுடன் தெரிவித்தார்.