‘லூசியா’, ‘யூ-டர்ன்’ படங்களின் மூலம் பிரபலமான கன்னட இயக்குனர் பவன், 2016-ல் வெளிவந்த யூ-டர்ன் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார். இதில் சமந்தா, ஆதி, நரேன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் இம்மாதம் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் யுடர்ன் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை சமந்தா, “யுடர்ன் படத்தை கன்னடத்தில் பார்த்தபோதே, இதனை ரீமேக் செய்தால் நான் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்குத் தகுந்தாற்போல், இயக்குநர் பவன்குமாரும் என்னையே நாயகி கதாபாத்திரத்திற்கு அணுகினார்.
பொதுவாக ஹீரோயின்ஸ் நாங்க எல்லாம் ஒரு படத்துல நடிக்கணும்னா எங்களோட உண்மையான கேரக்டரை மறந்துடணும். சொல்லப்போனா மூளையை வீட்டிலேயே கழட்டி வச்சுட்டு வந்துரணும். அந்த மாதிரியான கேரக்டர்ஸ்தான் பெரும்பாலும் எங்களுக்கு இருக்கும். சில படங்களில்தான் எங்களை நாங்கள் தாழ்த்திக்க தேவையில்லாத பாத்திரங்கள் அமையும்.
யூ-டர்ன் படத்தை எனக்கு ரொம்பப் பிடிக்க, என் மனசுக்கு நெருக்கமாக காரணமே இந்த கேரக்டர்தான். நான், நானா இருக்கேன். அதனால்தான் இந்தப் படத்தின் ப்ரோமோஷன்ஸ் எல்லாத்திலும் நானும் பங்கேற்கிறேன். பொதுவா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சில ஹீரோக்கள் இவங்கதான் ஒரு படம் முடிச்சு வெளியாகி வெற்றி பெரும் வரை ஒரு பெரிய பாரத்தை சுமப்பாங்க. ஆனால், இந்தப் படத்தில் நான் அப்படி ஒரு பொறுப்பை உணர்கிறேன். இந்தப் படத்தில் கன்டென்ட்தான் ஹீரோ, வேற யாருமில்ல” என்றார்.
இதனிடையில், கோலமாவு கோகிலா திரைப்படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள சமந்தாவின் யூ டர்ன் படத்திற்கும் அனிருத் ப்ரொமோ பாடல் வெளியிடப் போவதாக சொல்லியிருந்தார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான யூ டர்ன் திரைப்படத்தின் கர்மா தீம் ப்ரொமோ பாடலை வெளியிட்டுள்ளார்.
ப்ரொமோவில் சமந்தா கைகள் கட்டப்பட்டுள்ளது, அனிருத் நடந்து கொண்டே… திசை திரும்பினால் என பாடுவது போல் ஆரம்பிக்கும் பாடல் பிறகு வேகம் எடுக்கிறது. பிறகு கட்டவிழ்த்து சுதந்திரமாக சமந்தா நடனம் ஆடுவது போல் அமைந்துள்ளது.