உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தமிழக அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். அதேபோல், 9-வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தூக்கு தண்டனை பெற்ற மற்ற 5 பேருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் விடுதலைக்கு எதிரான மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள கவுசல்யா, “எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கொரோனா காலத்தில் இவ்வளவு அவசரமாக இந்த தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்கு பல கேள்விகளை எழுப்புகிறது.

தமிழக அரசு இந்த வழக்கை இன்னும் அதிக முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம். திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததற்கும் சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்றதற்கும் அதிக வேறுபாட்டை உணர்கிறேன். இன்னமும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை” என்றும் கவுசல்யா கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்திருக்கிறது.

இதனிடையே இத்தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலை- உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கென தனிச்சட்டம் இல்லாமையும்; அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே காரணங்களாகும். இது ஆணவக் கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பிற்கு உகந்தது ஃபேவிபிராவிர் மாத்திரை- DGCI ஒப்புதல்

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அருள்மொழி தனது பதிவில், “உடுமலைசங்கர் கொலைவழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது. முழுத்தீர்ப்பையும் படித்தால்தான் என்ன பிரச்சனை என்பது தெரியும். நீதிமன்றம் மக்களின் நம்பிக்கை அல்ல.. கடைசி நம்பிக்கை” என கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது பதிவில், “மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்!! என்று விமர்சித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு என் சகோதரர் சங்கர் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட என் குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது. என் சகோரர் சிந்திய ரத்தத்தின் ஈரம் கூட எங்கள் மனதிலிருந்து இன்னும் காயாதபோது என் சகோதரரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும் முதல் குற்றவாளியுமான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டிருப்பதும் மற்ற குற்றவாளிகளின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பதும் தவறான முன்னுதாரனமாகவே கருதுகிறேன்.

இந்த வழக்கு என் குடும்பம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, சமூக மாற்றத்தில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் சம்மந்தப்பட்ட வழக்காகவே நான் கருதுகிறேன். இது போன்ற தீர்ப்புகள் சாதி மீறி இணையும் இணையர்களை கொல்லும் சாதிவெறியர்களுக்கு முன்னுதாரனமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக நிச்சயம் நான் உச்சநீதிமன்றத்தை அணுகி நீதியை பெற்றிட முயல்வேன் என்பதை தெரிவிக்கிறேன்” என சங்கரின் உடன்பிறந்த சகோதரன் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.