பூமியை தாக்குவதற்கு ஒரு மைல் அகலமுள்ள ஒரு சிறுகோள் ஒன்று நெருங்கிக் கொண்டு இருப்பதாகவும், இன்று பூமியை தாக்கும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், பூமிக்கு மேல நெருங்கி வந்து கடந்து சென்றது. இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகமே கொரோனாவால் பெரும்பாதிப்பை சந்தித்து உயிரை காப்பாற்ற போராடி வரும் நிலையில், 1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட ‘1998 OR2’ என அழைக்கப்படும் ஒரு சிறியகோள், சுமார் 3.9 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 19000 கிலோமீட்டர் வேகத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பூமிக்கு மேல் கடந்து சென்றது.
பூமிக்கும் அந்த சிறிய கோளுக்கும் இடையே பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் இருப்பதால், இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் தற்போதைக்கு இல்லை, அதனால் பயப்பட தேவையில்லை என்று நாசா தெரிவித்தது. இதற்கிடையில், நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களை நேற்று இரவு பகிர்ந்தது. அதில், இந்த பெரிய சிறுகோள் தவிர, ஒரு சிறிய சிறுகோள் பூமியை நோக்கி வந்தது. தற்போது கிரகத்திலிருந்து சுமார் 23,000 மைல் தொலைவில் (அதாவது 36,400 கி.மீ) உள்ளது. அந்த சிறுகோளுக்கு ‘2020 ஹெச்எஸ் 7’ என பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது, இது ஒரு புவியியல் நடவடிக்கை என்று நாசா தெரிவித்துள்ளது.
1.2 மைல் அகலமுள்ள விண்வெளிப் பாறை என்று அழைக்கப்படும் இந்த சிறிய கோளின் வருகையை புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகம் கண்காணித்து வருகிறது. புவேர்ட்டோ ரிக்கோ ஆய்வகத்தின் கிரக ரேடார் தலைவர் டாக்டர் அன்னே விர்கி இதுபற்றி கூறுகையில், “1998 OR2 சிறுகோளின் ஒரு முனையில் உள்ள மலைகள் மற்றும் முகடுகள் போன்ற சிறிய அளவிலான நிலப்பரப்பு அம்சங்கள் விஞ்ஞான ரீதியாக கவர்ச்சிகரமானவை. ஆனால் நாம் அனைவரும் கோவிட் -19 பற்றி யோசித்து வருவதால், இந்த அம்சங்கள் 1998 OR2 சிறு கோளை முகமூடி அணிந்து கொண்டு வருவது போல் தோற்றமளிக்கின்றன” என்று நகைச்சுவையாக கூறினார்.
புவேர்ட்டோ ரிக்கோ ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஃபிளேவியன் வெண்டிட்டி இதுபற்றி கூறுகையில், “பூமிக்கு எதிர்கால நெருக்கமான அணுகுமுறைகள் உட்பட, எதிர்காலத்தில் சிறுகோள் எங்கு இருக்கும் என்பதை ராடார் அளவீடுகள் இன்னும் துல்லியமாக அறிய அனுமதிக்கின்றன. 2079 ஆம் ஆண்டில், 1998 OR2 சிறுகோள் பூமியை இந்த ஆண்டை விட 3.5 மடங்கு நெருக்கமாக கடந்து செல்லும், எனவே அதன் சுற்றுப்பாதையை துல்லியமாக அறிந்து கொள்வது அவசியம் என்றார்.