வங்கிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி, நீரவ் மோடி உட்பட 50 பேரின் வங்கிக்கடன் 68,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். இதற்கு கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் அந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி இதுவரை மொத்தம் 68,607 கோடி ரூபாய் கடன் ரைட்ஸ் ஆஃப் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின்படி, மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் 5,492 கோடி ரூபாயும், ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனத்திற்கு (REI Agro) 4,314 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் நிறுவனத்துக்கு 4,076 கோடி, ரோட்டேமேக் குளோபல் நிறுவனத்திற்கு 2,850 கோடி, குடோஸ் கெமி நிறுவனத்தின் ரூ.2,326 கோடி ரூபாயும் ரைட்ஸ் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனமான ருச்சி சோயா ரூ.2,212 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,012 கோடி, அதோடு கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 1,943 கோடி ரூபாய் ரைட்ஸ் ஆஃப்செய்யப்பட்டுள்ளது. பிரீசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ.1,962 கோடி என்ற அளவில் வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த பெயர் பட்டியல் வெளியான பின்னர், இது பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் பாஜக அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக வாராக் கடனைத் தள்ளுபடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டட் பதிவில், “விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68,607 கோடி கடன்களை மத்திய மோடி அரசு ரத்து செய்திருக்கும் தகவல் ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில் மூலமாகத் தெரியவந்துள்ளது.

வங்கிகளில் அதிகக் கடன் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலில் முதல் 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு நான் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சருக்கு நேரடிக் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை.

இப்போது ரிசர்வ் வங்கி அளித்த பதிலின் மூலம் நீரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்ட பாஜகவின் நண்பர்கள்தான் அந்த நபர்கள் என்பதும், அதனால்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை என்பதும் தெரிந்துவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், “ரூ.68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா.. நிறுத்தி வைத்துள்ளார்களா..என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா.

இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.