‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். கொடைக்கானல் வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தமிழக அரசால் கோடைவிழா நடத்தப்படும்.
இதில் மலர்கண்காட்சி, படகுபோட்டி, விளையாட்டுபோட்டிகள், வாத்துபிடிக்கும்போட்டி, படகு அலங்காரப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல லட்சம் மலர்களால் மலர் கண்காட்சி நடத்தப்படும். இவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து விடுதிகளில் தங்க யாரையும் அனுமதிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்றுவரை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இம்மாதம் நடைபெற இருந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
இதனால் மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த, ரோஜா, ஆர்கிட், பால்சம், மேரி கோல்ட், கேலண்டுளா, அஷ்டமரியா உள்ளிட்ட பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால், தடை உத்தரவு காரணமாக மலர்களை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் பூங்கா வெறிச்சோடிக் கிடக்கிறது.
மே 17 க்கும் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட்டம் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் நிலை உள்ளது. எனவே இந்த ஆண்டு கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடைபெற வாய்ப்பு இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.