மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஏற்கெனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் புகார் மனுக்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு நேரடியாக உத்தரவிடலாமா என்பதை முடிவு செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி அடங்கிய அமர்வுக்கு இம்மனுக்களை பரிந்துரைத்தார். அதன்படி அந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம் பின் வருமாறு :
புகார்தாரர்கள் அளிக்கும் மனுக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் போலீஸார் 7 நாள்களுக்குள் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்வதையோ அல்லது மனு முடித்து வைக்கப்படுகிறது என்ற தகவலையோ உரிய நபர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.
புகார்தாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யவில்லையென்றால் உடனடியாக உயர்நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது. அதேபோல புகார்கள் மீது விசாரணை நடத்தி முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து நேரடியாக உயர்நீதிமன்றம் வரக்கூடாது.
இது பற்றி மாவட்ட, மாநகர உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அங்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு செல்ல வேண்டும். அங்கேயும் உரிய பரிகாரம் வழங்கப்படவில்லை என்று கருதினால் மட்டுமே உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும். புகார்கள் மீது போலீஸார் 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
இதில் எல்லா வகையான புகார்களிலும் உரிய நிவாரணத்தை உயர்நீதிமன்றம் வழங்க முடியாது. பெரிய அளவிலான குற்றம், சில விவகாரங்களில் அதிகாரிகள் தலையீடு இருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில் மட்டும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.
அரிதிலும், அரிதான புகார்களுடன் இங்கு வரலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களுடன், காவல் நிலையங்களில் புகார் அளித்த தேதி, பெறப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். புகார் அளித்து 15 நாள்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்பவர்களின் மனுக்களை உயர்நீதிமன்ற பதிவுத்துறை ஏற்கக்கூடாது.
இதுதொடர்பாக ஏற்கெனவே காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி இந்த 1,004 மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.