பீகாரில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்று 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்து, மணமகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் கூர்கான் பகுதியில் பொறியாளராகப் பணியாற்றி வந்த மணமகனுக்கு கடந்த ஜூன் 15ம் தேதியன்று பலிகஞ்ச் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண நாளுக்கு முன்பு வரை மணமகனுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன.
இருப்பினும், குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில், மருந்து எடுத்துக்கொண்டு திருமணச் சடங்குகளில் மணமகன் பங்கேற்றிருக்கிறார். அந்நிகழ்வில் சுமார் 350 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த பிறகு மணமகனின் உடல் வெப்பநிலை அதிகரித்த காரணத்தால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே அந்த மணமகன் உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து அவருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளாமலேயே இறுதிச் சடங்குகளை முடித்திருக்கிறார்கள். ஆனால் இதுதொடர்பாக அறிந்த பாட்னா மாவட்ட நிர்வாகத்தினர் கடந்த 19ம் தேதி விசாரணை நடத்தியதில் பலிகஞ்ச் திருமணத்தில் பங்கேற்றதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதையடுத்து, தீவிரமான தேடுதலுக்குப் பிறகு அந்த மணமகனின் திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு அவர்கள் அனைவரையும் தனிமை முகாமில் வைத்து பரிசோதனை செய்ததில் இதுவரை 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் கொரோனாவுக்கு 63 பேர் பலி.. 3882 பேர் பாதிப்பு
திருமண நிகழ்வுகளில் நெருங்கிய உறவினர்கள் உட்பட 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்தால் மட்டுமே மாநிலத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இதுவரை பீகாரில் 10,043 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் 67 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து, உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர் உச்சத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தாமல் இரண்டாவது கட்ட தளர்வுகளை அளித்துள்ளது.
இதனால், வைரஸ் பரவல் மீது மக்களுக்கு அலட்சியம் ஏற்பட்டு மேன்மேலும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத மத்திய பாஜக மோடி அரசு அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.