தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளன.
 
1-ஆம் தேதிக்குப் பிறகும் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தினால் அவற்றைப் பறிமுதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
 
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது.
 
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளாக 13 பொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு :
 
பிளாஸ்டிக் தாள்கள்-விரிப்புகள்,
பிளாஸ்டிக்-தெர்மகோல் தட்டுகள்,
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் குவளைகள்,
பிளாஸ்டிக் தண்ணீர் குவளைகள்,
தண்ணீர் பாக்கெட்டுகள்,
பிளாஸ்டிக் தூக்கு பைகள்,
பிளாஸ்டிக் கொடிகள்,
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள்,
பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்,
நெய்யப்படாத பிளாஸ்டிக் தூக்கு பைகள்,
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் பைகள்,
தெர்மகோல் குவளைகள் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.
 
இந்தப் பொருள்களுக்குப் பதிலாக, பாக்குமட்டையில் தயார் செய்யப்பட்ட தட்டுகள், காகித பைகள், கண்ணாடி அல்லது அலுமினிய குவளைகளைப் பயன்படுத்தலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
 
அதேசமயம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டால் அவற்றை கண்காணித்து பறிமுதல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு குழு விலும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் அலுவலர், காவல் துறை அதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
சென்னையில், பெருநகர மாநகராட்சி இதற்கான குழுவை அமைத்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அந்தப் பொருள்களை பறிமுதல் செய்து உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கும் பணி மாவட்ட அளவிலான குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பிளாஸ்டிக் தடை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மண்டல அளவிலான கூட்டங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்கள் கோவை, திருச்சி, நெல்லை, சென்னை ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
பிளாஸ்டிக் தடையைச் செயல்படுத்த இரண்டு நாள்களே அவகாசம் உள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு எத்தகைய அபராதம் அல்லது தண்டனையை அளிப்பது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.