தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (13.03.2023) தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வான தமிழ் மொழித்தாளை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8,51,303 மாணவ, மாணவிகளில் 50,674 பேர் முதல் நாளில் தமிழ் மொழித் தேர்வினை எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரக்கூடிய தேர்வுகளில் இதே அளவு ஆப்சென்ட் இருக்குமா? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள், தமிழ் மொழித்தாள் தேர்வு பொதுவாக எளிமையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாகவும் புரிந்துகொண்டு பதிலளிக்க சிரமமாக இருந்ததாகவும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.