தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (08.05.2023) வெளியிடப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 10.05 மணிக்கு வெளியிட்டார். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் 91.45. மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மார்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அதேபோல் சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இதில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.78 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 4398 பேர் தேர்வு எழுதினர். இதில் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.20.
இந்நிலையில் “நம்பிக்கையுடன் முன்னேறிச் சென்று உலகை வெல்லுங்கள்” என்று பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாடவாரியான 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:
தமிழ்- 2
ஆங்கிலம்- 12
இயற்பியல் – 812
வேதியியல் – 3909
உயிரியல் – 1494
தாவரவியல் – 340
விலங்கியல் – 154
கணினி அறிவியல்- 4618
வணிகவியல்- 5678
கணக்குப் பதிவியல்- 6573
பொருளியல்- 1760
கணினிப் பயன்பாடுகள்- 4051
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 1334
மேலும், பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று என்று 6 பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் நாளை முதல் 13 ஆம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை (9-ம் தேதி ) காலை 11 மணி முதல் 13-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்: ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/-
மறுகூட்டல்-I (Re-totalling-I) கட்டணம் : உயிரியல் பாடத்திற்கு மட்டும் – ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.205/-
பணம் செலுத்தும் முறை: தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை: விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.