ஐநாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் அமைதிக்கான நல்லெண்ண தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை திரும்ப பெறுமாறு ஐநா சபைக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் யூனிசெப் நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அண்மையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீரில் 370ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதே போன்று பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததற்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் சைரீன் மசாரி யுனிசெஃப் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய அரசிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சரால், பாகிஸ்தான் நாட்டிற்கு கொடுத்த அணு அச்சுறுத்தல்களுக்கு ஆதரவாகவும் பிரியங்கா சோப்ரா செயல்பட்டு வருகிறார்.

ஆதலால் அவரை ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரை நல்லெண்ண தூதராக நியமித்தது கேலிக்கூத்தாக மாறிவிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக கங்கனா ரணாவத் தற்போது குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதர் என்பது எளிதான தேர்வல்ல.

நீங்கள், உங்களது கடமைக்கும், உணர்ச்சிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, நல்லெண்ண தூதராக இருப்பதால், உங்களது அடையாளத்தை தேசத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியாது என்பது உறுதி. ஆனால், நாமில் எத்தனை பேர் ஒவ்வொரு நாளும், மனதை விட இதயத்தை தேர்வு செய்கிறோம்” என்று கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.