பிகில் படத்திற்கு பூ தொழிலாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் பிகில். விஜய் படம் என்றாலே பிரச்சனை என்று ஆகிவிட்டது. விஜய்யின் படங்களுக்கு பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீடு தலை தூக்கியிருக்கும்.
இந்த பிரச்சனை துப்பாக்கி படத்தில் இருந்து ஆரம்பமானது. தலைவா படத்தில் டைம் டு லீட் என்ற வார்த்தைக்காக கடைசி வரை படத்தை வெளியிடாமல் தடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். சர்கார் படத்தின் போது தியேட்டரில் உள்ள பேனர்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது.
அதே போல் பிகில் படத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனைகள் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. கதை என்னுடையது என்றும், ஹிந்தி படத்தின் காப்பி என்றும் பல வகைகளில் இப்படத்திற்கு பிரச்சனைகள் ஏற்பட்டது.
கடந்த வாரத்துடன் இதற்கான பிரச்சனைகளை எல்லாம் முடிந்து ஒரு வழியாக ரிலீஸ் செய்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த படக்குழுவினருக்கு தற்போது மீண்டும் ஒரு பிரச்னை உருவாகி உள்ளது.
இந்நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதையால் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பூக்கடையில் வேலை பார்த்தவனை பட்டாசுக் கடையில் சேர்த்தால் அவன் பட்டாசுகள் மீது தண்ணீர் தெளித்துவிடுவான் என்று விஜய் பேசியது பூ தொழிலாளர்களுக்கு பிடிக்கவில்லை.
பிறப்பு துவங்கி இறப்பு வரை வரும் பூவை விற்பனை செய்பவர்களை விஜய் அவமதித்துவிட்டார். பூக்கடை தொழிலாளியை அவன், இவன் என்று தரக்குறைவாக பேசி தங்களின் மனதை விஜய் புண்படுத்திவிட்டதாக பூ தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக அந்த குட்டிக்கதை பிரபல பெண் மேடை பேச்சாளர் கூறியது என்று கூறி ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.
முன்னதாக பிகில் பட போஸ்டரில் விஜய் கறி வெட்டும் கட்டையில் செருப்புக்காலை வைத்து போஸ் கொடுத்ததை எதிர்த்து கறிக்கடை உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து கறிக்கட்டைகளை வாங்கிக் கொடுத்து அவர்களை விஜய் ரசிகர்கள் சமாதானம் செய்தார்கள். இந்நிலையில் புதுப்பிரச்சனை கிளம்பியுள்ளது. மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைப்பாரா விஜய் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க பிரான்ஸில் உள்ள சிஜிஆர் எபினே திரையரங்கில் பிகில் பிரீமியர் ஷோக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிகில் படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.