ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் இன்று (14.2.2022) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் இஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் சாட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “இஓஎஸ்-04 முதன்மை செயற்கைக்கோள் வெற்றிகரமாக துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன் அனுப்பப்பட்ட மற்ற செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்” என்றார்.
இஸ்ரோ தலைவராக சோம்நாத் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஏவப்பட்டுள்ள முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் நீரியல், வெள்ளம் ஆகியவற்றிற்காக அனைத்து வானிலை நிலைகளிலும் உயர் படங்களை இஓஎஸ்-04 செயற்கைகோள் அனுப்பும்” என்று தெரிவித்துள்ளார்.