facebook

முகநூல் கணக்கு வைத்திருந்தவர்களின் கணக்குகள் திருடப்பட்ட அதிர்ச்சித் தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதன்படி, முகநூல்க்குள் ஊடுருவி, கணக்குகளைத் திருடிய ஹேக்கர்கள், சுமார் 12 கோடி பேரின் ஃபேஸ்புக் கணக்குகளை திருடியிருப்பதும், 81 ஆயிரம் பேரின் கணக்குகளில் பதிவிட்டிருந்த தகவல்களைத் திருடி அதனை இணையதளத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் முகநூல் கணக்குக்குள் ஊடுருவி, அதில் 10% கணக்குகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஹேக்கர்கள் விற்பனையும் செய்துள்ளனர். அதாவது, ஒரு சிலரின் சுற்றுலாப் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்கள், சிலர், சிலருடன் செய்த உரையாடல்களையும் திருடி ஹேக்கர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக முகநூலில் சுமார் 5 கோடி பயனாளர்களின் கணக்குகளை மர்ம நபர்கள் ஊடுருவியதாக அந்த வலைதள நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து முகநூல் நிறுவனம் கூறியதாவது: ஃபேஸ்புக் பயனாளர்கள், தங்களது கணக்குகளில் நுழைந்த பிறகு அதிலிருந்து வெளிவராமல் தொடர்ந்து பயன்படுத்தவதற்கு வசதியாக மின்னணு கடவுகளை உருவாக்கி வைத்திருப்போம். அந்தக் கடவுகளை இணையதளம் மூலம் ஊடுருவித் திருடிய மர்ம நபர்கள், சுமார் 5 கோடி பயனாளர்களின் கணக்குகளைக் கட்டுப்படுத்தியது பின்னர் கண்டறியப்பட்டது.

அதையடுத்து, அந்தக் கணக்குகளையும், மேலும் ஊடுருவல் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள 4 கோடி கணக்குகளையும் பாதுகாக்கும் வகையில் மாற்றங்கள் செய்துள்ளோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டது 12 கோடி கணக்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.