பால் விற்பனையாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிரங்க மிட்டல் விடுத்த சென்னை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து மற்றும் நாகை காவலர் ரமணன் ரோஹித்,தின் முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் பென்னிக்ஸ், அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அடுத்தடுத்து பல போலீஸ் தாக்குதல் சம்பவங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகிக்கமாட்டோம் என பால் முகவர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதனிடையே, சென்னை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து, தமது ஃபேஸ்புக் பக்கத்தில், சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக, ‘காவலர்களுக்கு இனி பால் விநியோகம் செய்யமாட்டோம்’ என்று அறிவித்திருந்த பால் விற்பனை முகவர்களை மிகவும் மோசமாக விமர்சித்து, பதிவிட்டிருந்தார்.
இப்பதிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து, காவல் துறைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதால், ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
மேலும் வாசிக்க: தென்காசி இளைஞர் மரணம்; மீண்டும் ஒரு சாத்தான்குளம்
இதேபோல் நாகையை சேர்ந்த போலீஸ்காரர் ரமணன் ரோஹித் தமது சமூக வலைதளப் பக்கத்தில், “பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம்” என்று மிரட்டும் தொனியில் செய்துள்ள அவரது முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காவலர் ரமணன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார். சாத்தான்குளம் பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக மக்கள் காவல்துறை மீது அதிருப்தியில் இருக்கும் சூழலில், சென்னை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து மற்றும் நாகை காவலரின் முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.