ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையில் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், டெலிவரி வாகனங்கள், மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாசுபடும் காற்றின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கபடுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.