நவீன மருத்துவ முறைகளை தவறாகப் பேசிய பாபா ராம்தேவ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று கருப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால் தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.
பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. ராம்தேவ் தமது கருத்தை உடனடியாக திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியது.
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதைத் தொடர்ந்து, பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் கோரினார். ஆனால் மீண்டும் சில நாட்களுக்குள் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 10,000 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். அலோபதி மருத்துவத்தால் தான் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
ராம்தேவின் இந்த அவதூறு பேச்சு மருத்துவர்களையும், முன்களப் பணியாளர்களையும் கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியது. இதற்கு இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதற்காக ராம்தேவ் எழுத்துப் பூர்வமாக வரும் 15 நாட்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ.1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும் இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். அதனால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்- இந்திய மருத்துவர் சங்கம்
இதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாபா ராம்தேவ் அடுத்த வீடியோவை வெளியிட்டார். அதில் “என்னை கைது செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள் எல்லாம் வெறு வாய்ப்பேச்சு தான், சத்தம் தான் போடமுடியும். என்னைப் பற்றி பலவாறு அவதூறு பரப்பலாம், ஹேஷ்டேக் உருவாக்கி பிரச்சாரம் செய்யலாம்.
ஆனால் என்னைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் அப்பனால கூட இந்த சுவாமி பாபா ராம்தேவை கைது செய்ய முடியாது” என்று ஆணவமாகக் கூறியிருந்தார். அதேபோல், தற்போது வரை பாபா ராம்தேவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, பாபா ராம்தேவை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலமின்றி பணியாற்றி வரும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும், அரசின் தடுப்பூசி இயக்கத்தை அவமதிக்கும் நோக்கிலும் பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.
[su_image_carousel source=”media: 23984,23985,23983″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தொழிலதிபர். தற்போது நாட்டில் இருக்கும் சூழ்நிலை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார். அவர் தொடர்ந்து அலோபதி மற்றும் நவீன மருத்துவம் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். இதன் மூலம் ராம்தேவ் அங்கீகரிக்கப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய மருந்துகள் விற்க முயல்கிறார்
எனவே,பாபா ராம்தேவை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்க அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவின் ஆணவப் பேச்சு சர்ச்சை