உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தன.
அப்போது, மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று கடந்த 1994-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு, அதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மேலும், இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி, அயோத்தி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த அக்டோபர் 29-இல் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுக்களை புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வரும் ஜனவரி மாதம் விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, வழக்கு விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்து.
அதன்படி இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அயோத்தி வழக்கு ஜனவரி 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.