கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானை அன்னாசிப் பழத்தில் வெடி வைத்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி அவதூறாகப் பேசியதாக கேரள மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யானை கொல்லப்பட்டது தொடர்பாக மேனகா காந்தி பேசுகையில், யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். மலப்புரம் வயநாடு தொகுதிக்குள் தானே வருகிறது.

மலப்புரம் மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தீர்க்க ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். வெறும் பேச்சில் மட்டும் ஆர்வம் காட்டாமல் ராகுல் காந்தி இதுபோன்ற பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்றார். மேலும் இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று கேரள வனத்துறைச் செயலாளரை நீக்க வேண்டும், அமைச்சரையும் நீக்க வேண்டும்.

யானைகள் இதுபோல் கொல்லப்படுவது குறித்து 6ஆயிரம் பக்கத்தில் எங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதுவரை 11ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு முடியும் முன் இன்னும் எத்தனை யானைகள் கொல்லப்படப் போகின்றனவோ தெரியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க: கேரள யானை மரணதிற்கு நீதி கேட்டு தொடங்கிய கையெழுத்து இயக்கம்

மேலும் மேனகா காந்தி தனது ட்விட்டர் பதிவில், கேரள வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை யானைகள் கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் உள்ள கோயில்களிலும், தனியார் தரப்பிலும் யானைகளின் கால்களை உடைத்தும், நகங்களைப் பிடுங்கியும், பட்டினிபோட்டும் இதுவரை 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலேயே மலப்புரம் மாவட்டத்தில் தான் வனவிலங்குகளுக்கு எதிராக அதிகமான கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. ஆனால் இதுவரை யார்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

இதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யானை உயிரிழந்த பிரச்னையை மேனகா காந்தி திசை திருப்புவதாகவும், இது இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். யானை கொல்லப்பட்ட இடம் பாலக்காடு மாவட்டம் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார் இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மலப்புரத்தில் யானை கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மலப்புரம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலக்தில் மேனகா காந்தி மீது ஜமீல் என்பவர் புகாரளித்துள்ளார். இதனையடுத்து மேனகா காந்தி மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.