‘‘கட்சித் தொண்டர்கள் முதலில் தங்கள் குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டும். ஏனெனில் அதைச் செய்ய முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்று’’ மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
 
இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மறைமுக தாக்குதலாக கருதப்படுகிறது. பாஜ மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் முன்னாள் தொண்டர்கள் கூட்டம் நாக்பூரில் நடைபெற்றது. அமைச்சர் கட்கரி இந்த கூட்டத்தில் பேசியதாவது:பாஜ.வுக்காகவும் நாட்டுக்காகவும் உயிரையே கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்கிற பலரை நான் சந்தித்து இருக்கிறேன்.
 
அவர்களில் ஒருவரைப் பார்த்து நான், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர், “கடை வைத்திருந்தேன். சரியாக ஓடாததால் அதை மூடி விட்டேன். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்” என்று கூறினார்.
 
உடனே நான் “முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். ஏனெனில் வீட்டை நிர்வகிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது.
 
எனவே முதலில் குடும்பத்தையும் குழந்தைகளையும் முறையாக கவனியுங்கள். பிறகு கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் உழைக்க வாருங்கள் என்றேன். இவ்வாறு கட்கரி பேசினார்.
 
சமீபத்தில் மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வியடைந்தபோது, கட்சியின் வெற்றிக்கு உரிமை கோரும் தலைவர்கள் தோல்விக்கும் பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்று மோடி மற்றும் அமித்ஷாவை மறைமுகமாக தாக்கினார்.
 
கட்கரியின் சமீபத்திய பேச்சுக்கள் மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடிக்கு மாற்றாக பிரதமர் பதவிக்கு தான் வர விரும்புவதையே காட்டும் வகையில் உள்ளது. எனினும் பிரதமர் போட்டியில் தான் இல்லை என்று கட்கரி மறுத்து வருகிறார்.