பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேசம் மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையிலும், கடந்த 20 நாட்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 3 வயது சிறுமி கடந்த புதன்கிழமை திடீரென மாயமானார். அக்குழந்தையை பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு வெளியே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குழந்தையின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில், அந்த பிஞ்சு குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அதே கிராமத்தில் வசிக்கும் லெக்ராம் என்ற நபரை தேடி வருகின்றனர். லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் இது மூன்றாவது சம்பவம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு 13 வயது சிறுமியும், 17 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், 3 வயது பிஞ்சு குழந்தையும் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாலியல் கொலைகள் தொடர்பாக வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக கூறிய காவல்துறை அதிகாரி சத்யேந்திர குமார் சிங், குற்றவாளிகளை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டமும் குற்றவாளி மீது பாயும் என்றும் கூறி உள்ளார்.
இந்த நாட்டில் ராம ராஜ்ஜியம் தான் இருக்கவேண்டும். ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று பாஜக ஆளும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிவந்தாலும், அவரது மாநிலத்தில் இதுபோன்று குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: பாஜக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான 62 கிரிமினல் வழக்குகள் நீக்கமா.. கடுப்பில் கர்நாடக காவல்துறை