அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், பாஜகவுக்கு கொத்தடிமையாக அதிமுக உள்ளது என  குற்றம் சாட்டியுள்ளார்.
 
கடந்த 1991  முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜகண்ணப்பன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.
 
இதனிடையே அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்த ராஜகண்ணப்பன்,  மக்கள் தமிழ் தேசம் என்ற தனி கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியை 10 வருடங்களாக நடத்தி வந்த அவர், பின்னர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
 
2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு ப.சிதம்பரத்திடம் இவர் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
 
இவர் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில்  போட்டியிட விருப்பமனு கோரியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது.
 
இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  ராஜகண்ணப்பன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என்று பேட்டியளித்தார்.
 
மேலும் பேசிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவரும் ஆளுமையற்றவர்கள் என்றும் தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை அதிமுக கொடுத்தது தவறு என்றும் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது  என்றும் தெரிவித்துள்ளார்.
 
சிவகங்கை-யில் யார் நின்றாலும் கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் எனக்கும் ப.சிதம்பரத்திற்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என்றார்.
 
ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்  இருவரும் ஆளுமையற்றவர்கள் ,அதிமுகவில் ஆளுமை உள்ள தலைவர்கள் இல்லை பாஜக சொல்வதை எல்லாம் கேட்டு அதிமுகவை அடகு வைக்கின்றனர் என்றார்.
 
தென் மாவட்டம் என்பது திராவிட இயக்க பூமி, அங்கு  பாஜகவுக்கு இடம் ஒதுக்குகிறார்கள் நோட்டாவுக்கு கீழ் ஓட்டுவாங்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குகிறார்கள் தொகுதிகள் தொடர்பாக விவாதம் எதுவும் கிடையாது, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி தான் முடிவு  செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.