பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் “தர்பார்” திரைப்படத்தின் படபிடிப்பிற்காக இன்று மும்பை செல்கிறார். இந்நிலையில், போயஸ் கார்டனில் தனது இல்லத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்தும், தனது தர்பார் திரைப்படம் குறித்தும் பேசினார்.
ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, தர்பார் பட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் நன்றாக இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர், மகிழ்ச்சி என்றார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், எனது அரசியல் நிலைபாட்டை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். இதை ஊடகங்கள் பெரிதாக்கி எனக்கும், கமலுக்கும் ஆன நட்பை கெடுத்துவிடாதீர்கள் என்று தெரிவித்தார்.
தேர்தல் குறித்து பேசும் போது, தொடர்ந்து பேசிய அவர், பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் நாட்டில் நதிகளை இணைக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். நதிகளை இணைத்தாலே நாட்டின் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பகீரத் என பெயர் வைக்குமாறு முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் கூறினேன். இது தேர்தல் நேரம் என்பதால் இதுகுறித்து மேலும் எதுவும் பேச வேண்டாம் என கூறி பேட்டியை முடித்து சென்றார்.
இப்பேட்டியின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு தனது ஆதரவை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.