உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை கொன்ற ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி தன்னை பிடிக்க வந்த போலிஸாரை ரவுடி விகாஸ் துபே தலைமையிலான கும்பல் சுட்டதில் ஒரு டி.எஸ்.பி, 3 எஸ்.ஐ., உள்ளிட்ட 8 காவல்துறையினர் உயிரிழந்தனர்.

இந்தியாவையே அதிரச் செய்த இந்தப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே தலைமறைவான நிலையில், அவனது கூட்டாளிகள் 5 பேரை போலிஸார் சுட்டுக் கொன்று, சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து விகாஸ் துபேவை பிடிக்க 40 தனிப்படை போலிஸார் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜூலை.09 மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவில் வழிபாட்டின் போது அதிரடியாக கைது செய்து, கான்பூருக்கு அழைத்து வரும் வழியில் விகாஸ் துபே என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: 8 காவலர்கள் கொடூர கொலை… பாஜக பின்னணியில் தப்பிக்கிறாரா விகாஸ் துபே…

விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துபேவுக்கு பின்புலமாக இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரை காப்பாற்றவே யோகி ஆதித்யநாத் அரசு இந்த என்கவுண்டரை செய்துள்ளதாக சர்ச்சைகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.