பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி “ராம ராவண ராஜ்ஜியம் (ஆர் ஆர் ஆர்)” படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாக்ஸர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் நடிக்கின்றனர்.
‘ராம ராவண ராஜ்ஜியம்’ படத்தில் ராமனாக வரும் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ், சீதை கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மற்றொரு முக்கிய கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார்.
300 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனியை இயக்குநர் ராஜமெளலி அணுகியுள்ளார். சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் இப்படத்தின் திருப்புமுனை கதாபாத்திம் என்றும் இந்த திரைபடத்திற்கு சமுத்திரக்கனி ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு ஹைதராபாத்தில் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ஜனவரி மாதம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் சமுத்திரக்கனி கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.