டி20 மற்றும் 50 ஓவர் உலககோப்பையை ஒரே நேரத்தில் கைப்பற்றி இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
டி20 உலககோப்பை போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின. மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான், பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை, சாம் கரன் பிரித்து ரிஸ்வானை போல்டாக்கி வெளியேற்றினார். 15 ரன்களில் அவர் நடையைக்கட்ட, முஹம்மத் ஹரிஸ் களத்துக்கு வந்து சேர்ந்தார்.
நிலையான ஆட்டத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் அடில் ரஷித். அந்த அணியில் ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் 15, முகமது ஹாரிஸ் 8, இஃப்திகார் அகமது டக் அவுட், சதாப் கான் 20 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களையும், ஷான் மசூத் 38 ரன்களையும் அடிக்க, பெரிய அளவில் நம்பிக்கை அளிக்காத பேட்ஸ்மேன்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 137 ரன்களை சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத், கிரிஷ் ஜோடன் 2 விக்கெட்டுகளையும், பென்ஸ்டோக்ஸ் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தது. சுலபமான இலக்கு என நினைத்து வந்த இங்கிலாந்து அணியை அவ்வளவு எளிதாக வெல்லவிடவில்லை பாகிஸ்தான் பவுலர்கள்.
தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னுக்கும், கேப்டன் ஜோஸ் பட்லர் 26 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் வந்த பிலிஃப் சால்ட் 10 ரன்களும், ஹாரி ப்ரூக் 20 ரன்களையும் மட்டுமே எடுத்து அவுட்டாகினர்.
இதனால் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 97/4 என திணறி வந்தது. வெற்றி பெற 30 பந்துகளில் 41 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. விக்கெட்கள் விழுவதை பார்த்து உஷாரான பென் ஸ்டோக்ஸ் பதற்றத்தில் எந்தவித அதிரடியையும் காட்ட முடியாமல் சிங்கிள்களாக அடித்து வந்தார். இந்நிலையில் இஃப்திகார் வீசிய இரண்டே இரண்டு பந்துகள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றி அமைத்தது.
காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சாஹீன் அஃப்ரிடி 15வது ஓவரை வீச வந்தார். ஆனால் முதல் பந்தை மட்டுமே வீசிவிட்டு, தன்னால் முடியவில்லை என பெவிலியனுக்கு சென்றுவிட்டார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் நின்ற கேப்டன் பாபர் அசாம் மீதம் இருந்த 5 பந்துகளை வீச வேறு வழியின்றி பார்ட் டைம் பவுலரான இஃப்திகார் அகமதை அழைத்தார்.
இஃப்திகாரின் ஓவர் தான் சரியான நேரம் என நினைத்த ஸ்டோக்ஸ், பயனுள்ளதாக மாற்றிக்கொண்டார். முதல் 3 பந்துகளில் சிங்கிள்கள் மட்டும் செல்ல, கடைசி 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் பறந்தது. நீண்ட நேரமாக பவுண்டரியே அடிக்காத இங்கிலாந்து, இஃப்திகாரின் ஓவரில் இருந்து நம்பிக்கை பெற்றது. அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் செல்ல 24 பந்துகளில் 28 ரன்கள் என்ற சூழலுக்கு வந்தது.
அதற்கு அடுத்த ஓவரில் முகமது வசீமின் ஓவரில் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் பறந்தன. இதனால் 19 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்களை அடித்து வெற்றியை பெற்றது. மேலும் 2வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
2015 ஆம் ஆண்டு சொதப்பலுக்கு பிறகு, அடுத்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து 2019 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து, 2021ஆம் ஆண்டு டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டி வரை வந்தனர். தற்போது 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் கடந்த 6 ஆண்டில் இங்கிலாந்து சிறந்த 50 ஓவர் மற்றும் டி20 அணியாக விளங்கி வருகிறது.