இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு வெளியேறிய இம்ரான்கான், இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9 ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 9.4.2022 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசாத் கைசர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்கவே, அவர்கள் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை துவங்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
நள்ளிரவு எந்த நேரம் ஆனாலும் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை செய்யத் தயார் என நீதிபதிகள் அறிவித்தனர், கைதை தவிர்க்க நள்ளிரவு 12 மணிக்கு 10 நிமிடங்களுக்கு முன் வாக்குப்பதிவு நடத்த சபாநாயகர் அசாத் கைசர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து நள்ளிரவு நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் தோல்வியடைந்து பதவியை இழந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
இதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இம்ரான் கான் தனது பதிவில், “பாகிஸ்தான் 1947ல் சுதந்திர நாடானது. ஆனால் இப்போது இன்று இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சதிக்கு எதிரானது. பாகிஸ்தானின் மக்கள் தான் எப்போதும் நாட்டின் இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் காவலர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.