பப்ஜி மதன் தொடர்பாக 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்தனர்.
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் யூடியூபர் மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருத்திகா மட்டும் ஜாமீனில் விடுதலையானார். மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப் பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 12) தாக்கல் செய்தனர்.
32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2 கோடியே 89 லட்சம் பண மோசடி செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மதனின் மனைவி கிருத்திகாவை 2வது குற்றவாளியாக இந்த வழக்கில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சேர்த்துள்ளனர். இருவரின் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கம்