திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம், மேலும் கோயிலில் பூஜை செய்ய தந்திரியை மன்னர் குடும்பமே நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலகின் பணக்கார ஆலயங்களில் ஒன்றான கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு இருக்கும் பெருமாள், பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தண்ட வர்மா மகாராஜாவால் 260 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு, அவர் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தக் கோயிலை திருவிதாங்கூர் சமஸ்தான குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வந்தனர்.

இந்த கோவிலில் 6 ரகசிய அறைகள் பூட்டப்பட்டு இருந்தன. அதில் பிரமிக்க வைக்கும் தங்கம், வைர நகைகள், சிலைகள் இருப்பதாகவும், கூறப்பட்டது. இதையடுத்து, பாதாள அறைகளை திறந்து சோதனை மேற்கொள்ள 7 பேர் குழுவையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கோயிலின் 6 ரகசிய அறைகள் ஏ முதல் எப் வரை பிரிக்கப்பட்டன. 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. அதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.

கோயிலில் இருக்கும் ‘பி’ அறை மட்டும் கடந்த 100 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை என்றும், இந்த அறையை திறந்தால் ஒருவித சாபம் வந்துவிடும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இதுவரை ‘பி’ அறை மட்டும் திறக்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையே, கோயிலில் 186 கோடி மதிப்புள்ள 769 தங்க கலசங்கள் திருடப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, இந்த கோயிலின் உரிமைகள் மன்னர் குடும்பத்திடமிருந்து வந்தது. அந்த உரிமைகள் 1991ஆம் ஆண்டு திருவாங்கூர், கொச்சி தேவஸ்தானத்தால் பறிக்கப்பட்டது எனக் கூறி, கேரள உயர்நீதிமன்றத்தில், மன்னர் குடும்பம் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், திருவாங்கூர் மன்னர் குடும்பத்திடம் நிர்வாக உரிமையை வழங்கத் தேவையில்லை என 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து திருவாங்கூர் மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “1991 ஆம் ஆண்டு, ஸ்ரீ சித்திரா திருநால், மன்னர் மறைவுக்குப்பின் நிர்வாக உரிமையைப் பறிக்கத் தேவையில்லை. மன்னரின் மறைவு மன்னர் குடும்பத்தின் உரிமையைப் பாதிக்காது. அவர்களே தொடர்ந்து நிர்வாக பொறுப்பைக் கொண்டிருப்பார்கள். கோயிலில் பூஜை செய்ய தந்திரியை மன்னர் குடும்பமே நியமிக்கலாம்.

கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க வேண்டும். நிர்வாகக் கமிட்டிக்கு திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். இந்தக் கமிட்டியில் அனைவரும் இந்துக்களே இடம் பெற்று இருக்க வேண்டும். மாநிலத்தின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு இந்தக் கமிட்டி செயல்பட வேண்டும். கோயிலில் இருக்கும் ‘பி’ அறையை திறப்பது குறித்து இந்தக் கமிட்டியே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள், திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவோடு இணைக்கப்பட்டபோது போடப்பட்ட ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.