ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் எம்பிக்களின் கேள்விக்கு 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
 
நிதித்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 31 பேர் உறுப்பினராக உள்ளனர்.
 
நாடாளுமன்ற நிலைக்குழுவில் நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஆஜரானார். அப்போது அவர், “கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நாட்டில் வங்கி கடன் 15 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.
 
நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம், வங்கிகளின் வாராக்கடன் நிலைமை உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
 
எனினும் அவர், ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7வது பிரிவு, என்பிஏ, மத்திய வங்கியின் தன்னாட்சி, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவில்லை.
 
இதனையடுத்து 10 முதல் 15 நாட்களில் எம்பிக்களின் கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் எழுத்துப்பூர்வமாக பதில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நிலைக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.