நடிகர் விஜய் சேதுபதி சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர். இதற்கு சமூகவலை தளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தனது கருத்தை துணிச்சலாக கூற அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
கடந்த 6ஆம் தேதி காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கும் “டிஜிகாப்” என்ற மொபைல் செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, “செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ஒரு செய்தி சேனல் வெளியிட்ட பதிவை போட்டோஷாப் மூலம் மாற்றி, விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை வைத்து, புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி விஜய் சேதுபதி பேசியதாகக் கூறி சிலர் பரப்பி உள்ளனர். அதை சில சமூகவலைதள பக்கங்கள் விஜய் சேதுபதியின் கருத்து போல் வெளியிட்டு சர்ச்சையானது.
இதனையறிந்த விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் டிவி சேனலில் வந்த உண்மை செய்தியையும், விஷமிகள் பரப்பிவிட்ட போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டு, “என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.
எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பதிவுடன் தான் பேசிய வீடியோ இணைப்பையும் வெளியிட்டுள்ளார்.