நேபாளத்தின் காத்மண்ட்டில் இருந்து பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தின் காத்மண்ட்டில் இருந்து பொக்காரா சர்வதேச விமான நிலையம் நோக்கி 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
பயணிகளுடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக பொக்காரா விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொக்காரா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.
இதுகுறித்து, நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா கூறுகையில், மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.