மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அடக்கும் கட்டிளம் காளைகள் களமாடும் வேகத்தில் அடங்கிவிடும் இளையோர் என களை கட்டியது.

காளைகள் ஓடும் பகுதியான அவனியாபுரம் மெயின் சாலையில் இருந்து இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் வரை மூங்கில் தடுப்பில் இரும்பு தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. போட்டியின்போது வீரர்கள் காயம் ஏற்படாமல் தரையில் தேங்காய் நார் பரப்பப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை பிடிக்க 250 வீரர்கள் களமிறங்கினர்.

இப்போட்டியில் 28 காளைகளை அடக்கி மதுரை ஜெயஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் முதலிடம் பிடித்தார். அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. விஜய் மூன்றாம் முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2020, 2021ம் ஆண்டுகளிலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.