சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 48 தொழிலாளர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவிற்கு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. முதல் மாதம் மட்டும் தொழிலாளர்களுக்கு அந்த தனியார் நிறுவனம் சம்பளம் கொடுத்துள்ளது.

அடுத்த 2 மாதத்திற்கும் மேலாக சரியாக சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் நிறுவனத்தினர் தமிழக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே தகவல் தெரிவித்து விடக்கூடாது என அவர்களை கண்காணிக்க சிலரை அந்த நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

இதனால் வெளியில் தகவலை சொல்ல முடியாமல் தமிழக தொழிலாளர்கள் பயத்துடன் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கும்பல் இல்லாத நேரத்தில் அந்த வழியாக வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மூலம் பாதிக்கப்பட்ட 48 தொழிலாளர்களும், தங்கள் சோகத்தை செல்போனில் வீடியோ எடுத்து தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளனர்.

அதன்பேரில் அந்த வீடியோவை பார்த்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே அந்த வீடியோவை மலேசியாவில் உள்ள தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜ் பார்த்துள்ளார். இதையடுத்து உடனடியாக தமிழக தொழிலாளர்களை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்று, அங்கிருந்து தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அந்த நிறுவனத்திடம் பேசி அவர்களின் ஊதியத்தை பெற்று தந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்