பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா ரத்து செய்துள்ளார்.

பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்தாவுக்கு தியான பீட ஆசிரமம் உள்ளது. மேலும் உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கர்நாடக ஹைகோர்ட்டு 2010-இல் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பின்னர் வழக்கின் விசாரணைக்காக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து லெனின் கருப்பன் என்பவர், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அந்த மனு ஹைகோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் 40 முறை ஆஜராகச் சொல்லியும் ஆஜராகவில்லை என்பதால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா. தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவை கைது செய்து அழைத்து வர ‘புளு’ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நித்யானந்தா மீதான போலீஸின் பிடி இறுகியுள்ளது.

காவல்துறை தரவுகளின் படி, நித்யானந்தா தற்போது ஈக்வடார் பகுதியில் தஞ்சம் புகுந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ஈக்வடாரில் இல்லை என்று ஈக்வடார் அரசு அறிவித்தது.

அதற்குப் பிறகு இன்றுவரை சர்வதேச காவல்துறையின் உதவியுடன் நித்யானந்தா தேடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையில், கைலாசா என்னும் தனிநாடு உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா சில வேடிக்கைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் நித்தியானந்தா தரப்பில் கோரப்பட்ட ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா. நித்யானந்தா கட்டாயம் ஆஜராக வேண்டும் என்ற நிலையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தமுறையும் ஆஜராகாமல் தப்புவதற்காக ஏதாவது செய்ய முயற்சிக்கலாம் என்பதால் அடுத்து ஜாமின் கேட்டு வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி.