வணிக சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க கேட்டு கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் .,தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் 14 பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடைமுறை வருகிற ஜனவரி 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதன்படி,
மக்காத பிளாஸ்டிக் தாள்கள்,பிளாஸ்டிக் தட்டுகள்,பிளாஸ்டிக் டீ கப்கள்,தண்ணீர் கப்புகள்,தண்ணீர் பாக்கெட்டுகள்,பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்,பிளாஸ்டிக் கைப்பைகள்,
பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
தொடர்ந்து சட்டத்தை மீறினால், நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.