நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.
ஆனால், நீட் தேர்வு விலக்கு மசோதா 5 மாதங்களாக ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தினார்.
இருப்பினும் நீட் தேர்வு விலக்கு மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதனால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
இது தொடர்பாக கடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றபோது திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது. நீட் தேர்வு அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் விளக்கம் அளித்து ஆளுநர் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக பிப்ரவரி 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.