கொரோனா காலத்திலும் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, செப்டம்பர் 13ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை உறுதியாக கூறியுள்ளது.
நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15,97,433 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு மட்டுமின்றி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய மம்தா பானர்ஜி, “கூட்டுறவு கூட்டாட்சி பெயரில் மாநில உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்குகிறது மத்திய அரசு.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குரிய சூழல் வரும் வரை நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தேர்வு நடத்துவதில் விடாப்பிடியாக உள்ளது. எனவே அனைத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்” என வலியுறுத்தினார்.
மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், மத்திய அரசுக்கு பயப்பட வேண்டுமா அல்லது அவர்களை எதிர்த்து நிற்க வேண்டுமா என்பதைப் பற்றி நாம் முடிவு செய்தாக வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்காமல் இருப்பது, கொரோனா பரவல் காலகட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது, மத்திய அரசின் அதிகார குவிப்பு மற்றும் மாநிலங்களில் உரிமையை நசுக்குவதாக ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: மோடி அரசின் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக குரல் எழுப்பும் கிரெட்டா துன்பெர்க்