நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழலில், நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரையும் நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல், வெள்ள பாதிப்பு என பல்வேறு பாதிப்புகளுக்கு இடையே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடப்பதை பல்வேறு மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தன. கடினமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுத முடியாது.
இதனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த கூடாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என்றும் அனுமதி அளித்தது.
இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட காட்சிகள் சார்பாக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து, 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 1ந் தேதி முதல் ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் கடந்த 3 நாள்களில் 4,58,521 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 1,14,563 பேர் எழுதவில்லை என மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
மேலும் வாசிக்க: தமிழக அரசின் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு- AICTE முடிவால் மாணவர்கள் ஷாக்