2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகி உள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமீரேட்ஸ் சென்றுள்ள சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களும் ஒரு வார தனிமைப்படுத்தலுக்கு பிறகு நடந்த கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்தால் மட்டுமே பயிற்சியை தொடங்க முடியும்.

இந்நிலையில் சென்னை அணியில் தீபக் சகார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இரு வீரர்கள் மற்றும் 11 அணி நிர்வாகத்தினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மற்ற அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா நெகடிவ் வந்ததை அடுத்து பயிற்சியை தொடங்கினர். சென்னை அணியினர் மட்டும் இன்று பயிற்சியை தொடங்குகின்றனர்.

இதற்கிடையே சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். இந்நிலையில் தற்போது சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் துவக்கம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தன் அச்சத்தை வெளிப்படுத்தி வந்தார். பாதிப்புக்கு நடுவே ஐபிஎல் தொடரே நடத்த வேண்டாம் என அவர் பல முறை கூறி இருந்தார். சென்னையில் சிஎஸ்கே நடத்திய பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை. அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய்புறப்பட்டு சென்றது. அப்போது ஹர்பஜன் சிங் அணியுடன் செல்லவில்லை.

இந்நிலையில், சொந்தக் காரணங்களால் விலகுவதாகவும், தன்னை 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கவும் அணி நிர்வாகத்துக்கு ஹர்பஜன் கூறியுள்ளார். அவர் வைரஸ் அச்சம் காரணமாகவே விலகி இருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் ஆகியோரின் விலகலால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிஎஸ்கே அணியின் இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா மற்றும் மிட்செல் சான்ட்னர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஐபிஎல் போட்டிகளில் விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா