நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டியில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு [National Eligibility cum Entrance Test (Undergraduate)] விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பத்தில் எவ்வித தவறு செய்யாமல் இருக்கவும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் அரசுப் பள்ளியில் மட்டும் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி இருந்தனர்.
எனவே இம்முறை 7.5% உள் ஒதுக்கீடு இருக்கும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு: நடிகர் சூர்யா