2019 லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி “நான் மக்கள் பாதுகாவலர்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. இதனை குறிக்கும் வகையில் இதன் பொருள் தரும் இந்தி வார்த்தையான ‘செளகிதார்’ என்ற அடைமொழியை பாஜகவினர் தங்கள் பெயருக்கு முன் சூட்டிக்கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தனது பெயருக்கு முன்னாள் ‘செளகிதார்’ என வைத்துள்ளார். அவரை தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், தனது பெயருக்கு முன்னாள் ‘சவ்கிதார்’ என்று சேர்த்துள்ளார்.
இதுபோல் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் ‘செளகிதார்’ என சேர்த்து வருகின்றனர். இதனால் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ‘வாட்ச்மேன்’ படக்குழுவினர் தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நாய் ஒன்றின் வாயில் ஒர் பதாகை உள்ளது. அதில் ‘நானும் செளகிதார் தான்’ என்ற வாசகமும் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ், யோகிபாபு, ராஜ் அர்ஜூன், சக்யுக்தா ஹெக்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தை டபுள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.