நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, நாடு முழுதும், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இதற்கிடையில், வரும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வினியோகப் பணிகளில் 2 நாட்கள் கால தாமதம் ஏற்பாட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி 13 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும். முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணை நோய்கள் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முன்கள பணியாளர்கள் தவிர, மேலும், 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோ-வின் போலி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்- எச்சரிக்கும் மத்திய அரசு