விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படம் “தல 59”. இந்தப் படத்தை “தீரன் அதிகாரம் ஒன்று” பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார். ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மங்காத்தா படத்திற்கு பின் மீண்டும் அஜித் நடிக்கும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தினைக் குறுகியக் காலப் படமாக முடித்து, 2019 மே 1 அஜித் பிறந்தநாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் ‘ஏஏஏ’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், “தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பார்த்திருக்கிறேன். முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் ‘பிங்க்’ படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.